வேலூர்: சுமார் 20 அடி உயரமுள்ள பாலத்தின் உச்சியிலிருந்து ஆளுக்கு ஒரு பக்கம் கயிற்றை பிடிக்க.. அந்தரத்தில் தொங்கியபடியே இறங்கியது குப்பனின் உடல்!
சவ ஊர்வலத்திலும் தீண்டாமையை நினைத்து குமுறிய பட்டியலின மக்களுக்கு இப்போது ஒரு விடிவுகாலம் கிடைத்து விட்டது!
வாணியம்பாடியை அடுத்த நாராயணபுரம் காலனிப் பகுதியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறார்கள்.
இங்கு வசித்து வந்தவர்தான் 55 வயதுடைய குப்பன் என்பவர். இவர் கடந்த 18ந்தேதி எதிர்பாராதவிதமாக ஒரு விபத்தில் இறந்துவிட்டார்.
ஆனால் அங்கே ஒரு சிக்கல் எழுந்தது.. ஆற்றங்கரைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் சக்கரவர்த்தி அல்லது யுவராஜ் ஆகியோருக்கு சொந்தமான நிலத்தின் வழியாகத்தான் பிணத்தை கொண்டு செல்ல வேண்டும்.
இவர்கள் இருவருமே தங்கள் நிலம் வழியாக குப்பனின் உடலை கொண்டு போக கூடாது என்று கறாராக சொல்லிவிட்டனர்.
இதனால் பாலத்தில் இருந்து கயிறு கட்டி ஆற்றில் இறக்கினர் குப்பனின் உடலை.. சுமார் 20 அடி உயரமுள்ள பாலத்தின் உச்சியிலிருந்து ஆளுக்கு ஒரு பக்கம் கயிற்றை பிடிக்க.. அந்தரத்தில் தொங்கியபடியே இறங்கியது குப்பனின் உடல்! பிறகு எப்படியோ பாடையை பத்திரமாக பிடித்துச் சுமந்து சென்று தகனம் செய்துவிட்டனர்.
சவ ஊர்வலத்திலும் தீண்டாமையா என்ற கேள்வி எழுந்தது. எவ்வளவு இந்த விஷயத்தை சிலர் அமுக்க பார்த்தாலும், பாலத்தில் இருந்து சடலத்தை கீழே இறக்கிய சம்பவத்தை வீடியோவாக பொதுமக்கள் எடுத்துவிட்டனர்.
அது இணையத்திலும் படு வைரலாகி வயிற்றெரிச்சலை அதிகமாக்கியது. தீண்டாமை
இன்னமுமா.. இவர்கள் இப்படி இருக்கிறார்கள்.. சாதி பிரச்சனை, சுடுகாடு பிரச்சனை, என்று இன்னமும் கொடுமைகள் நிலவுவதாக பதிவுகளை போட்டனர்.
விஷயம் சீரியஸ் ஆனதும், கலெக்டர் சண்முகசுந்தரம் இது சம்பந்தமான விசாரணையை நடத்த உத்தரவிட்டார்.
அதன்படி, வாணியம்பாடி தாசில்தார் முருகன் தலைமையிலான வருவாய் துறையினர் நாராயணபுரம் காலனி மக்களைச் சந்தித்து விசாரணை நடத்தினர்.
அப்போதுதான், நாராயணபுரம் கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு, தனியாக சுடுகாடு இல்லை என்பதும், ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ள ஒரு இடத்தைதான் சுடுகாடாக பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதும் தெரியவந்தது.
ஒருசிலர் அந்த இடம் தூரமாக இருப்பதால், பாலாற்றங்கரையோரம் கொண்டுவந்தும் அடக்கம் செய்துள்ளனர். இந்த விவரங்களை கலெக்டருக்கு தாசில்தார் உள்ளிட்டோர் தெரியப்படுத்தினர்.
இதையடுத்து, மாவட்ட கலெக்டர், யாருமே சடலங்களை எரிக்க பாலாற்றங்கரையை பயன்படுத்தக்கூடாதும் என்றும் சொல்லி, சுடுகாடாக பயன்படுத்த காலனியிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பனந்தோப்பு என்ற பகுதியில் 50 சென்ட் நிலம் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார்.
சடலத்தை எரிக்க பல வருஷங்களாக படாத பாடு பட்டு வந்த பட்டியலின மக்களுக்கு இப்போதுதான் ஒரு தீர்வு கிடைத்துள்ளதால், மகிழ்ச்சியில் உள்ளனர்.